Nov 24, 2014

 பாகம் 2

சிலப்பதிகாரம் -ஒரு புதிய கண்ணோட்டம்

திருமதி திலகவதி 

தொகுப்புரை: சௌந்தர்

 

 

திருமதி திலகவதி அவர்களை மேடைக்கழைத்து அறிமுகம் செய்தார் நண்பர் துரையவர்கள். பல வருடங்களாக இவரைப் பற்றி அறிந்திருந்தும், இவரது தமிழார்வம், மற்றும் தமிழிலக்கியப் புலமை பற்றி அறிந்திருந்தும், இத்துணை காலமாக மாகா தமிழ்ச் சங்கத்திற்கு அறிமுகம் கிடைக்காமற் போயிற்றே என்னும் வருத்தம் தீரும்வகையாக,

கார்த்திகை மாதத்தின் சிறப்பம்சமாக இந்த விளக்கைக் குன்றிலேற்றினார்



[தொடக்கமே புதியதாக அமைந்தது. சிலம்பைக் கையில் ஏந்தி, திறப்போம், ஆராய்வோம், யோசிப்போம்; சிறிய, புதிய, எளிய கண்ணோட்டம் கொண்டு நோக்குவோம் என்று புது மாதிரியாகத் தமது பேச்சைத் தொடங்கினார்.

 

தொழில் மருத்துவம் என்பதாலோ என்னவோ, முதலிலேயே ஒரு ‘நறுக்’. கண்ணோட்டம் என்றால் தாட்சண்யம் என்று கொள்ள வேண்டாம், இது ஒரு பார்வை என்று தாட்சண்யமே இல்லாமல் எச்சரித்து விட்டார்.

 

தொன்மைத் தமிழரின் கலைச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது சிலப்பதிகாரம். பெண்ணுக்குப் பெருமை தரும் முதல் தமிழ்க் காப்பியம் இதுவே. கண்ணகி நல்லாள் புகாரில் அமைதிப் பெண்ணாகத் தோன்றி, மதுரையில் வீரம் விளைத்து, வஞ்சியில் வானவர் வாழ்வு பெறுகிறாள். பத்தினி வழிபாட்டை இளங்கோவடிகள் இந்நூல் வாயிலாக வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார். மண்ணக மாந்தர்க்கு அணியான கண்ணகி, விண்ணக மாந்தர்க்கு விருந்தாகிய செய்தியை இந்நூல் திறம்படச் சித்தரிக்கிறது. 

 

நூலின் முப்பெரும் பிரிவுகளுக்கு முறையே புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற பெயர்களை அமைத்து இளங்கோவடிகள் மும்மைத் தமிழகத்தை ஒருமைத் தமிழகமாக, ஒற்றுமைப்பட்ட தமிழகமாகக் காணவிழைகிறார். இன்று நாம் புலம்பெயர்ந்து வந்தது போல், அன்றும் கண்ணகி மூன்று நாடுகள் புலம்பெயர்ந்து புகுந்த நாட்டில் நீதி கேட்டு அறத்தை நிலைநாட்டுகிறாள். 

 

காப்பியம் ஒரு காலக் கண்ணாடி என்று திரு.பசுபதி உரையாற்றியதைத் தொடர்ந்த இவரும், சிலம்பினை ஒரு சரித்திரக் கண்காட்சிச்  சாலையாகவே (historical museum) அமைத்துவிட்டார். திலகவதியாரின் கண்ணோட்டங்கள் வண்ணப்படங்களாகவே மாறிவிட்டன. நம்மை இக்காட்சியகத்தில் உலா அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டியாகவே (tour guide) உடன் வந்தும் விளக்கங்கள் தருகிறார் இவர்.

 

இளங்கோ ஒரு சாதாரணக் குடிமகன் அல்லர். சேரமன்னன் இரும்பொறையின் இரண்டாவது மகன். [இரும்பொறையின் உருவம் பதித்தக் காசுகளில் இவர் ரோமானிய அரசர் போன்றே ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறார்] முறைப்படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அண்ணன் செங்குட்டுவனைப் புவியரசாக்கி, இவரோ கவியரசானார். இவர் காட்டும் முதல் வண்ணப்படம் புகார் நகரத்தின் செல்வச் செழிப்பு. துறைமுகத்தில் வணிகர்கள். சாவகர், யவனர், யூதர், சோனகர் மற்றும் பல வேற்று நாட்டவர்கள். 

 

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்கு நீர்வரைப்பும்’


வண்ணம், சுண்ணம் மலர் முதலியன விற்கும் வீதியும் பாணர் இருப்பிடங்களும், நவமணிகள் விற்கும் வீதியும் அங்கே திகழ்ந்தன. பட்டினப்பாக்கத்தில் அரச வீதியும், வேளாளர் வீதியும், கணிகையர் வீதியும் விளங்கின. இவ்வாறெல்லாம் சிறந்து பாடப்பட்ட சிலம்பின் கதை புதிய கண்ணோட்டத்தில்  அடுத்தாக “ட்ரியாஜ்” (triage) என்று சொல்லப்படும் மருத்துவ மேடை ஏறுகிறது.

 

நோக்கு-1


பெண்ணடிமை என்னும் புற்றுநோய்

 

தமிழ்க் காப்பியத் தலைவியர் யாருக்குமே நேராத மாக்கொடுமை கண்ணகி வாழ்வில் நேர்ந்து விடுகிறது. அவள் தன் கணவனை இழந்து விடுகிறாள். கோவலன் உயிரோடிருந்த போது, அவன் கண்ணகியைப் பிரிந்து, மாதவியை நாடுகின்றான். அடிக்கடி அவளையும் பிரிந்து வம்பப் பரத்தரோடும், வறுமொழியாளரொடும் திரிகிறான். பெண்மை தாழ்த்தப்படுகிறது. மற்றைய புராணங்களிலும் பாஞ்சாலி, நளாயினி, அகலிகை முதலானோர், பெண்ணடிமைக்குக் காட்டாகவே அமைக்கப்பட்டுள்ளனர். ‘தெய்வந் தொழாள்’ என்னும் குறள் எதற்கு எழுதப்பட்டது? நூலின் பெயரில் ‘அதிகாரம்’ என்ற சொல்லிருந்தும் பெண்ணிற்கு அதிகாரம் கொடுத்ததாகச் சொல்லப்படவில்லையே, ஏன்? உண்மையில் கற்பு தவறியவன் கோவலனே! இருப்பினும் கண்ணகி சிரித்த முகத்துடன் அமைக்கப்பெற்றது ஏன்? அவள் செய்வது பொய்ப்புன்னகையா? கண்ணகி என்னும் பெயரை கண்-நகி (அதாவது கண்ணால் நகைக்கிறாள்) என்றும் கொள்ள வாய்ப்புளதோ?

 

பெண்ணடிமை என்பது சமுதாயத்தில் புரையோடிவிட்டப் புற்றுநோய். ஆங்கிலக் கவி ஷேக்ஷ்பியரும் இதனை ‘canker in the fragrant rose’என்றே உருவகப்படுத்துகிறார்.

 

How sweet and lovely dost thou make the shame

Which, like a canker in the fragrant rose,

Doth spot the beauty of thy budding name!

O in what sweets dost thou thy sins enclose!

 

இந்த புற்றுநோய்க்கு மருந்து என்னவென்றால், பொங்கியெழுந்து மதுரை மாநகரை எரிப்பதுதான் (radiation therapy)

 

நோக்கு-2


சிலப்பதிகாரம் ஒரு புரட்சி நாடகம்.

 

அரசுக்குடியை விட மேலாய் விளங்கிய வணிகர்கள் நிரம்பிய நகரம் புகார். அரசியின் சிலம்பில் முத்துப் பரல் ஒலிக்கக், குடிமகன் சிலம்பில் மாணிக்கம் முரலும் சிறப்பு இருந்தது.

 

இந்திரப் பட்டணமான அமராவதியையொக்கும் நகரம். மருவூர்ப்பாக்கம் என்னும் நகர்ப்பகுதியில், 

 

உலகுவிளங்கு அவிரொளி மலர்கதிர் பரப்பி

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்

 

என்று சொல்லும்படியான நிலாமுற்றமும் (வேயா மாடம்- நிலாமுற்றம்; என்ன அழகிய சொல்லாட்சி!) , பெரிய அணிகள் வைத்த அறைகளோடு கூடிய இடங்களும், மானின் கண்ணைப்போலத் துளை செய்யப்பட்ட காற்றுச் செல்லும் சாளரங்களைக் கொண்ட மாளிகைகளும் காண்பாரைத் தம்மைவிட்டுப் போக விடாமல் தடுக்கும் வெளிநாட்டவர் இருப்பிடங்களும் பல விளங்கின. 

 

இன்றைய ஹாலிவுட் போன்ற நகரம். இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? கூடவே ஹாலிவுட்டுக்கு உண்டான அவலங்களும் உண்டு. கணிகையர்க்கென்றே வீதிகள். மதுரை நகரிலோ இரண்டு வீதிகள். மதுரை மன்னனும் கற்பில் பிறழ்ந்தான். கோப்பெருந்தேவியும் கண்ணகியைபோல் கற்பிற்பிறழ்ந்த கணவரை மன்னித்து மன உளைச்சலில் காலம் தள்ளுகின்றனர்.

 

காம ஊடலினாலும், மன உளைச்சலினாலும் தீர ஆராயாமல், பாண்டிய மன்னன் ‘கள்வனைக் கொண்டுவா’ என்பதற்குப் பதிலாக, ‘கள்வனைக் கொன்றுவா’ என்று சொன்னது நாடகத்தின் உச்சக் கட்டம்.

 

நோக்கு-3

ஊழ்வினை என்பது ஒவ்வாது


இளங்கோவடிகள் வினையின் ஆற்றலைக் காப்பியத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கோவலன் குன்றமன்னதோர் செல்வத்தைத் தொலைத்து மல்லல் மதுரையை நாடிச் செல்வது வினையின் பயனால்தான். இதே வினை விளைகாலத்தின் கோலத்தினால்தான் சினையலர் வேம்பன் யாதும் தேரானாகிக் கோவலனைக் கொன்று சிலம்பைக் கொணரப் பணித்திட்டான். ஊழ்வினை ஒருநாளும் ஒழிக்க முடியாதது என்பது உண்மையே என்றாலும், வாழ்வில் நம்லிக்கையை இழத்தல் கூடாது என்பது இளங்கோவின்  நோக்கமாகும்.

 

அல்லவை செய்தார்க்கு அறங்கூற்ற மாமென்னும்

பல்லவையோர் சொல்லும் பழுதன்றே-பொல்லா

வடுவினையே செய்த வயவேந்தன் தேவி

கடுவினையேன் செய்வதூஉங் காண்

 

என்று கண்ணகி கூற்றாகவே, பாண்டிமாதேவி இறந்தது தெரியாமல் அவள் சொல்வதுபோல் அமைக்கிறார் இளங்கோ.

 

முற்பிறவி-இப்பிறவி என்ற இணைப்புகளை இன்றும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்; படிக்காவிட்டால்  தேர்வில் வெற்றிபெற இயலாததைப் போல், ஊழ்வினையின் மேல் எல்லாப் பழியையும் இடாமல், எதிர்காலத்தின் விளைவுகளை எண்ணி செயலாற்ற வேண்டும் என்று ஒரு புது நோக்கு இங்கே புலப்படுகிறது.

 

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்லென்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி

 

கோப்பெருந்தேவியும், கற்புக்கரசியாய் இருந்து, கணவன் உயிர்நீத்த அளவிலே தானும் உயிர் நீத்தாள் என்பதைவிட, சூன்யமான ஒரு எதிர்காலத்தைக் கண்டு நடுங்கி, அந்த அச்சத்தின் விளைவாகவே உயிர் நீத்தாள் என்று கொள்வது இங்கே ஒரு புதிய நோக்கு.

 

நோக்கு-4

கண்ணகி ஒரு புதுமைப்பெண்

 

பாரதியின் நோக்கில் கண்ணகி ஒரு புதுமைப்பெண்ணாகவே மாறிவிடுகிறாள். இது எவ்வாறு என்று பார்ப்போம்.

சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும்போது சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவன் கோவலன், மாதவியிடம் சென்றபோது அவனுடைய நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவும் இழந்த போதும் அவனைத் தடுக்க வில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தன் சிலம்பைக் கோவலனிடம் கொடுத்ததானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது, கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக்கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்றம் சாட்டத் தூண்டுகின்றது. இப்படி இருந்தவள்  தனது கணவன் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறிட்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு, நீதியை நிலைநாட்டுவதைப் பார்க்கும்போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும்  காண முடிகின்றது. 

 

நாணமும் அச்சமும் நாய்களுக்கு. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் இவை யாவும் பெற்றப் புதுமைப் பெண்ணாகவும் கண்ணகியை ஒரு புது நோக்கில் விவரித்துத் தன் உரையை திலகவதியார் நிறைவு செய்தார்.

 

(நிறைவு)

—————————————————————————————————————


To Advertise here contact : macafamily@gmail.com
↑