Nov 23, 2014

 மாகாவின்  தமிழரங்கம்  - 23 நவம்பர் 2014

தொகுப்பு: சௌந்தர்

 

சொற்பொழிவாளர்களும், தலைப்பும்:

முனைவர் திரு. பசுபதி- ஐம்பெருங்காப்பியம்-ஓர் அறிமுகம்

மருத்துவர் திருமதி திலகவதி- சிலப்பதிகாரம் -ஒரு புதிய கண்ணோட்டம்

 

மதியம் 2 மணியளவில் தொடங்கிய இவ்வரங்கம், வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் களைகட்டியது. முதற்கண் சொற்பொழிவாற்ற வந்த முனைவர்.பசுபதி அவர்களை, தமிழ் அரங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் திரு.இரகுராமன் வரவேற்றார். மாகாவின்  தமிழரங்கில் இதுவரை பல தலைப்புகளில் உரையாடல்களும் சொற்பொழிவுகளும் கேட்டிருப்பினும், முதல்முறையாக முழுவதும் சங்க கால இலக்கியங்களைப் பற்றிப் பேசியதில்லை. இதுவே முதல் நிகழ்வு. சிலம்பைப் பற்றிப் பேசுமுன்னர், காப்பியங்கள் என்றால் என்ன? அவை யாவை என்பது போன்ற சில அடிப்படைச் செய்திகள் தெரிந்து கொள்வது அவசியமே. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் திரு. பசுபதியாரின் உரை முதலில் அமைந்தது சிறப்பே.

 

ஐம்பெரும் காப்பியம்- ஓர் அறிமுகம்

 

‘காப்பியம்’ என்றால் என்ன?

 

‘காப்பியம்’ என்பது தமிழ்ச்சொல்லா? வடசொல்லா?  காப்பியம் என்ற சொல், ‘காவ்யா’ என்ற வட சொல்லின் திரிபு என்பர். ‘காவியம்’ என்பதற்குக் கவியால் செய்யப்பட்டது என்று பொருள் (எஸ்.  வையாபுரிப்பிள்ளை தரும் விளக்கம்). தமிழில் ‘காப்பியம்’ என்ற சொல் வழக்கிலுள்ளது. தொல்காப்பியரை அறியாதார் யாருளர்?

 

காப்பியங்கள் ஏன் ஐந்து என்று வைத்திருக்கிறார்கள்? ஏன் பெருங்காப்பியங்கள்; சிறு காப்பியங்களும் உளவோ? இதைப் பற்றியெல்லாம் முதலில் ஆராய்ச்சி செய்தவர் திரு கி.வா.ஜ அவர்கள். 1940-ம் ஆண்டிலே, இவர் வெளியிட்ட சிறு கட்டுரையில் இலக்கியத்தைக், ‘காலக் கண்ணாடி’ என்று சொல்கிறார். காப்பியங்களில் மொழியின் வளமையைக் காணலாம். பொதுவாக, உலக மொழிகளில் முதலில் வருவது காப்பியமாகத்தான் இருக்கும். ஹோமர், வர்ஜில், கதே போன்ற எழுத்தாளர்கள் படைத்த நூல்கள் இதற்குச் சான்றுகள். ஆனால், தமிழில் அவ்வாறு அமையவில்லை.

 

அமைதி நிலவிய காலங்களில், சிற்றரசர்களைப் பாடும் புலவர்களின் பாடல்களே சங்க இலக்கியத்தில் முதலில் காணக்கிடைக்கின்றன. காப்பியக் காலம் பின்னரே வந்தது. தமிழிலக்கணம் கூற வந்த தண்டியல்ங்காரம், செய்யுள் வகைகளை வரையறுக்குங்காலை, முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என்று ஒவ்வொருபடியாக முன்னேறி, பெருங்காப்பியத்தின் இலக்கணத்தை எடுத்துச் சொல்கிறது.

 

‘பெருங்காப் பியநிலை பேசுங்காலை

வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்

றேற்புடைத் தாகி முன்வர வியன்று

நாற்பொருள் பயக்கு நடைநெறித்தாகி’ என்று தொடங்கி,

இறுதியில்,

‘. . . . சுவையும் பாவமும் விரும்பக்

கற்றோர் புனையும் பெற்றிய தென்ப’ என்று விவரிக்கிறது.

 

நாற்பொருள் பயக்குநடை என்பது, அகமும், அகப்புறமும், புறமும், புறப்புறமும் பயந்தநடை என்று பொருள் கூறுகிறது.

 

பழந்தமிழ் இலக்கியங்களில், காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காப்பியம் என்பது தெய்வத்தையோ, உயர்ந்த மக்களையோ, கதைத் தலைவர்களாகக் கொண்ட தொடர்நிலைச் செய்யுள் ஆகும். இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஒரு ஐயம் மனதில் எழலாம். எவ்வளவோ தொடர்நிலைச் செய்யுள் இருக்கும்போது, ஏன் காப்பியத்தை மட்டும் குறிப்பாகத் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகிறோம்? இதற்கு விளக்கம்‘பங்கயத்தைக்’ கொண்டு அறியலாம். இது என்ன புதிராக இருக்கிறதே! தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க என்று படித்திருக்கிறோம், ஆனால் இங்கே ‘பங்கயம்’ எப்படி விளக்கம் தருகிறது? சேற்றில் பிறந்த அல்லது சேற்றில் இருக்கும் பொருட்கள் பலவிருந்தும் சிறப்புப்பொருளாக எப்படித் தாமரையையே பங்கஜம் என்னும் சொல் குறிக்குமோ அதுபோலே, தொடர்நிலைச் செய்யுள் என்பதும் காப்பியத்தையே குறிக்கும் எனக் கொள்க.

 

ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலை நாதர். அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின. இவற்றுள் எல்லாமே இந்நால்வகைப் பொருட்களையும் தம்முள் கொண்டவை அல்ல. இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவ்விரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர்.

 

இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி, சமகாலத்தில் தோன்றியவையாகும். பிற மூன்று காப்பியங்களும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

 

வடமொழியின் பஞ்ச காவிய மரபு (பஞ்ச-ஐந்து) தமிழில் ஐம்பெரும் காப்பியமாய் வந்தது. நன்னூல் உரையாசிரியராகிய மயிலை நாதரே (14ஆம் நூற்றாண்டு) முதன்முதலாக ஐம்பெரும் காப்பியம் எனும் சொல்லாக்கத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் எவை என்று கூற வில்லை.தமிழ் விடு தூது, ‘கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்’ என்று பாடுகிறது. திருத்தணிகை உலாவின் ஆசிரியராகிய கந்தப்ப தேசிகரே (19ஆம் நூற்றாண்டு) ஐம்பெருங்காப்பியங்கள் இவை என்று வரையறுத்துக் கூறினார்.அவை:

     (1) சிலப்பதிகாரம்      (2) மணிமேகலை     (3) சீவகசிந்தாமணி      (4) வளையாபதி      (5) குண்டலகேசி

வணங்காமுடி என்னும் திரைப்படத்தில், இந்த ஐங்காப்பியங்களை வரிசைப்படுத்தி, அணிகலன்களாக வருணிக்கும் பாடலொன்று உண்டு.

 

https://www.youtube.com/watch?v=ao78FpinpIM

 

 

சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி

செவிதனில் மிளிர்வது குண்டலகேசி

திருவேநின் இடையணி மணிமேகலை

கரமதில் மின்னுவது வளையாபதியாம்

கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்

கண்கண்டாய் ஐம்பெரும் காப்பியத் திலகமே!

 

என்று ஒரு நாட்டியக்காரி அரசன் முன்னிலையில் பாடுவதாக அமைந்தது.

 

ஆனால் இந்தப் பட்டியல் பெருங்காப்பிய இலக்கணத்திற்குச் சற்றும் பொருந்தவில்லை என்பாரும் உண்டு.

 

காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது. அதில், சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் ஆகும். மூன்றாவதான சீவகசிந்தாமணி, விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம் என்பதுடன், காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது. நான்காவதாக உள்ள வளையாபதியில்,விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம்,கடைசியாக உள்ள குண்டலகேசியோ சமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும்.

 

சிலப்பதிகாரம்:

சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோவடிகளால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் அளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

 

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,

சூழ் வினைச் சிலம்பு காரணமாக,

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

 

என்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

மணிமேகலை

ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

   

கோவலனின் இறப்பு மாதவி,மணிமேகலை இருவரையும் நிலைகுலைய வைக்கிறது. இருவரும் பௌத்த சமயத் துறவினை ஏற்கின்றனர். மணிமேகலையை இளவரசன் உதயகுமரன் பின் தொடர்கிறான். தன் மனம் சலனப்படாமல் இருக்க வேண்டும் என்று மணிமேகலை எண்ண, மணிமேகலா தெய்வம் அவளைத் தூக்கிச் சென்று மணிபல்லவத் தீவில் விட்டு விடுகிறது. அங்கு,தன் பழம் பிறப்பைப் பற்றி அறிகிறாள். மூன்று மந்திரங்களைப் பெறுகிறாள்.

     ஆபுத்திரனின் அமுதசுரபி கோமுகிப்    பொய்கையிலிருந்து மணிமேகலைக்குக்     கிடைக்கிறது.    உதயகுமரன்     தரும் தொல்லைகளிலிருந்து தப்ப, அவள் காயசண்டிகை     எனும் பெண்வடிவினை எடுக்கிறாள்.காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் கொல்லப்படுகிறான். இளவரசனைக் கொன்ற பழி, மணிமேகலை மீது விழுகிறது.    அவள்     சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறாள். மகனைப் பறிகொடுத்த அரசி, மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள்.    வரவலிமையால் மணிமேகலை அவற்றிலிருந்து மீள்கிறாள். சிறைச்சாலையிலும் வெளி இடங்களிலும் மணிமேகலை அமுத சுரபியால்     அனைவருக்கும் உணவிடுகிறாள்.மணிமேகலை காஞ்சி சென்று அறவண அடிகளிடம் ஆசி பெற்று, பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்புகிறாள்.

இன்று மனித உரிமைகள் பற்றி எங்கும் பேசுகிறோம். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இவை மூன்றையும் மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற முத்திரை வரிகள் இங்கு காணப்படுவதால், இது ஒரு சமுதாயச் சீர்திருத்தக் காவியமாய் அமைகிறது.

மணிமேகலை பற்றி மு.வ. அவர்கள், இளங்கோவைப்போல் சமயப்பொதுமை காணப்பெறவில்லை; சமயம் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் விரவி இருக்கின்றன; ஒரே அகவற்பாடல் மட்டுமே; ஓசை நயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சீவக சிந்தாமணி:

 ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்,மனைவி விசயை மீது அளவு கடந்த காமம் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஒப்படைத்தான். அவன் சூழ்ச்சி செய்து மன்னனைக் கொல்ல முயன்றபோது, மன்னன் கருவுற்றிருந்த தன் மனைவியை ஒரு மயில் பொறியில் ஏற்றி அனுப்பிய பின் போரில் இறக்கிறான்.

     அவள் இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள். பின் தவம் செய்யச் சென்று விடுகிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை வளர்க்கிறான். தன் திறமையால் சீவகன் எட்டுப் பெண்களை மணக்கிறான். நாட்டைக் கைப்பற்றி ஆட்சியமைத்து, இல்வாழ்வின் நிலையாமையை நினைத்து ஞானம் பெற்றுத் துறவியாகின்றான்.

 

சிந்தாமணி நிலையாமையை இறுதியில் வலியுறுத்தினாலும் கற்பனை வளத்திலும், உவமை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. வயல்கள் முற்றிச் சாய்ந்துள்ள நெற்கதிர்களைக் கற்பனையாய்ப் பாடுகிறார். கருவுற்ற பாம்பின் தோற்றம் போல் நாற்று வளர்ந்து, மேலல்லார் செல்வம் போல் தலை நிமிர்ந்து சில நாள் நின்று, கற்றறிந்த பெரியார் போலத் தலைகவிழ்ந்து நெற்பயிர்கள் காய்த்தன என்கிறார் திருத்தக்க தேவர்.

     சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்   

மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்     

செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூற்     

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே                

 - (நாட்டுவளம், 53)

 

என்னும் இப்பாடல் கல்விச் சிறப்பினையும் விளக்குகிறது.

 

வளையாபதி:

ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சமண நூல்

நவகோடி நாராயணன் ஒரு வணிகன்.இவன் வேறு சாதிப் பெண்ணை மணக்க, அந்நிகழ்வு அவனது குலத்தோருக்கு வெறுப்பினைத் தருகின்றது. அவ்வெறுப்பினைத் தாங்க இயலா அவன் தன் மனைவியை விட்டு அயல்நாடு சென்றுவிடுகிறான்.அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான்.

 

     மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி

     பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்

    துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை

    நறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்

    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. என்று சுட்டிக் காட்டுகிறது.

 

குண்டலகேசி:

 

இது பௌத்தக்காப்பியம்; மறைந்து போன தமிழ் நூல்.

     புறத்திரட்டில் பத்தொன்பது செய்யுட்கள்     மட்டுமே காணப்படுகின்றன.

     ஆசிரியர் நாதகுத்தனார்.

பத்திரை என்ற வணிகர் குலப்பெண் காளன் என்ற கள்வனை நேசிக்கிறாள்.காவலில் இருந்த அவனைத் தன் தந்தை மூலம் மீட்டு மணம் புரிகிறாள். ஒருநாள் பத்திரை சினத்தால் தன் கணவனைக் கள்வன் எனத் திட்டிவிட அவன் அவளைக் கொல்ல மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். சாகும்முன் அவனை அவள் மும்முறை வலம்வர விரும்ப, அவன் இசைகிறான். அவனைப் பத்திரை கீழே தள்ளிக்கொன்று விடுகிறாள். பிறகு, அவள் வாழ்வை வெறுத்து, துறவு பூண்டு புத்த சமயம் சார்ந்து முக்தி பெறுகிறாள்.

 

வாழ்வின் நிலையாமை பற்றிய பாடல்

 

பாலகன் இளைஞனாகிறான்,இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம்? அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்? என நாதகுத்தனார் வினவுகிறார்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்    

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்    

மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பு மாகி    

நாளும் நாம் சாகின்றேமால் ; நமக்கு நாம் அழாத தென்னோ?

 

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமாகப் பெருங்கதை கூறப்படுகிறது. ப்ருஹத் ஸம்ஹிதை என்ற வடமொழி நூலே தமிழில் பெருங்காப்பியமாயிற்று என்பர். பின்னால் வந்த பெருங்கதையும், சூளாமணியும் பெருங்காப்பியங்களுள் கருதப்படவேண்டும் என்ற கருத்து அறிஞர்களிடையே நிலவுகிறது. இருப்பினும்,  பெருங்கதை, சூளாமணி, யசோதரகாவியம், உதயண குமாரகாவியம், நீலகேசி முதலானவை ஐஞ்சிறுகாப்பியங்களே. அதன்பின்னர்க் கம்பராமாயணம், பெரியபுராணம் வில்லிபாரதம், நளவெண்பா, தேம்பாவணி, சீறாப்புராணம் ஈறாக, இன்றைய  பாஞ்சாலி சபதம், யேசுகாவியம் வரை எல்லாமே காப்பியங்களே.

 

(தொடரும்)

 

 

To Advertise here contact : macafamily@gmail.com
↑